Bharadwaj Exclusive: முன்னணி இசையமைப்பாளர் பரத்வாஜ், தற்போது தளபதி விஜய்க்கு இசையமைத்து வெளியாகியுள்ள ஆல்பம் பாடல் பற்றி பிரத்தியேகமாக நம்மிடையே மனம் திறந்துள்ளார்.
இசையமைப்பாளர் பரத்வாஜ்
பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் 90களின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசையை அள்ளிக் கொடுத்தவர். குறிப்பாக மனதை வருடும் நாஸ்டால்ஜியா ரக பாடல்களும் இவரது இசையில் ஏராளமாய் வெளிவந்துள்ளன. இவருடைய இசையமைப்பிலான பாடல்கள் இப்படித்தான் இருக்கும் என்கிற ஒரு வரையறைக்குள் அடங்காதது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்கு இசையமைத்த இவரது ‘ஒவ்வொரு பாடலுமே’ ஒவ்வொரு ர(ரா)கம்.
‘தீ தீ தளபதி’ ஆல்பம்
நடிகர் அஜித் நடித்த அட்டகாசம் திரைப்படத்தில், ‘தல போல வருமா’ பாடலுக்கு இசையமைத்த இவர் தற்போது தளபதி விஜய் பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஆம், தீவிர விஜய் ரசிகர்களான, கனடா விஜய் மக்கள் இயக்கத்தினர் தயாரிப்பில் உருவாகி Behindwoods யூடியூப் தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகியுள்ள ‘தீ தீ தளபதி’ ஆல்பம் பாடலுக்கு தான் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு இசை அமைத்தது குறித்து இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறும்போது, “மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் பெரும்பாலும் அஜித் படங்களுக்கு இசையமைத்ததாக பல ரசிகர்கள் என்னை நினைவில் வைத்துள்ளனர். அஜித்தின் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் உட்பட அவர் நடித்த 6 திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். அருமையான பாடல்களாகவே அவை அமைந்தன.
என்னுடைய ஆல்பங்களில் எப்போதும் துள்ளலான ஒரு பாடல் இருக்கும். ஜெமினி படத்தில் ‘ஓ போடு’, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ‘சீனா தானா’ ஆகியவற்றை சொல்லலாம். சேரனின் பாண்டவர் பூமி படத்தில், ‘அவரவர் வாழ்க்கையில்’ கதைச் சூழலை சொல்லும் பாடலாகவும், ஆட்டோகிராஃப்பில் ஒவ்வொரு பூக்களுமே ஒரு மெலோடி மோட்டிவேஷனல் பாடலாகவும் அமைந்திருக்கும். மேற்கண்ட இந்த திரைப்படங்களில் ஆல்பமும் ஹிட் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
எனினும் தளபதி விஜய்க்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கைகூடி பின் நடக்காமல் போய்விட்டன. நானும் இதனிடையே சற்று ஆக்டிவாக இல்லாமல் இருந்தேன். இப்பொது கம் பேக் கொடுக்க நினைக்கும்போது இப்படி ஒரு உற்சாகமான பாடல் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ‘தீ தீ தளபதி’ பாடலுக்கு விஜய் ரசிகர்கள் தரும் ஆதரவும் அன்பும் ஒரு திரைப்படத்துக்கு இசையமைத்தது போன்ற உணர்வையே நிறைவாய் தந்திருக்கிறது. இப்போது எனக்கு இன்னும் தளபதி மற்றும் புதிய தலைமுறையினருடன் இணைந்து பல படங்கள் பணிபுரியக்கூடிய உத்வேகம் கிடைத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது
மேலும் பேசியவர், “இந்த பாடலை கனடா மக்கள் இயக்கத்தின் செயலாளர் ஜனனி மற்றும் கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் பாடியுள்ளனர். அஜித் நடிப்பில் நான் இசையமைத்த காதல் மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘உன்னைப் பார்த்த பின்பு நான்’ பாடலாகட்டும், அமர்க்களம் படத்தில் ஷாலினி பாடுவதாய் இடம்பெற்ற ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ பாடலாகட்டும், வசூல் ராஜா படத்தில் ‘காடு திறந்தே கிடக்கிறது’ பாடலாகட்டும் இவை அனைத்தும் பெண்களுக்கு பிடித்தமான பாடல்களாகவும் அமைந்தன.
அந்த வரிசையில், இந்த பாடல் ரசிகர்களுக்கானது தான் என்றாலும், அனைத்து தரப்பினருக்குமான பாடலாக இருக்க வேண்டும் என்று கருதினோம். அந்த நோக்கம் ஜனனியின் குரலால் நிறைவேறியது. கார்த்திக் மற்றும் ஜனனி இருவரும் இந்த பாடலை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான பாடலாக பாடி அசத்தியுள்ளனர். இந்த பாடலே என் வெரைட்டி ஆல்பங்களை ஒரே பாடலாக கேட்ட ஒரு உணர்வு தருகிறது.
தீ தீ தளபதி எனும் இந்த ஆல்பம் பாடலின் பாடல் வரிகளும் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டும். அவ்வளவு அருமையாக வந்திருக்கின்றன. இந்த பாடலை கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் எழுதியுள்ளார்.
ரெக்கார்டிங் அனுபவம் புதுமை..
அத்துடன் எனக்கு இந்த பாண்டமிக் சூழலில் இந்த பாடலை பதிவு செய்த அனுபவம் புதிதாக இருந்தது. முன்பெல்லாம் 100 பேராவது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நிற்பார்கள். பெரிய அளவில் பாடல் பதிவு நடக்கும். இப்போது கணினி மயப்படுத்தப்பட்டதுடன், இன்னும் ஒரு படி மேலே போய் ரிமோட் வொர்க்கில் எல்லாம் நடந்தது.
ஆம், கனடாவின் Toronto-வில் உள்ள Exodus Studio Productions-ல் இந்த பாடல் ரெக்கார்டிங் பணிகளை அந்தோணி மேற்கொள்ள, சிம்ப்சன், அருண் உலகா, கணேஷ் உள்ளிட்டோர் இசைக்கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். இந்த பாடலை இசையமைக்கும் பணி, மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் பணிகள் அனைத்தும் சென்னை தி.நகரில் உள்ள The B-Room இசைக்கூடத்தில் நடந்தன. ஆக, இந்த மாதிரி சூழலில் பணிபுரிந்த அனுபவமும் இந்த பாடல் மூலம் கிடைத்துவிட்டது. தளபதி விஜய் ரசிகர்களின் இந்த பேரன்போடு அடுத்து புத்துணர்வுடனும் மேலும் இசைப் பணிகளில் ஈடுபட தயாராகிவிட்டேன்!” என்று உற்சாகமாக பேசியுள்ளார்.
ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகும் தீ.. தீ.. தளபதி
கனடா விஜய் மக்கள் இயக்கத்தினர் தயாரித்து வழங்கியுள்ள இந்த ஆல்பம் பாடலின் புரொடக்ஷன் லைன் மேனேஜராக கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் பாலாஜி பெருமாள் பணிபுரிந்துள்ளார். SFX, Sound Mixing பணிகளை A.J.டேனியல் கவனித்துக்கொள்ள, ஒளிப்பதிவு மற்றும் லிரிக் வீடியோ எடிட்டிங் பணிகளை இந்தியாவில் இருந்து சஞ்சய் சூர்யா கையாள, கனடாவில் ஒளிப்பதிவை Focus Creations மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடையே ஒரு ஆல்பம் பாடலாக மட்டும் இல்லாமல், ஆந்தம் பாடலாகவே மாறி ட்ரெண்ட் ஆகி வருவதாக கனடா விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பாடல் லிங்க் இணைப்பில் உள்ளது.