கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமான்யர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் கொரோனா வைரஸினால் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரேச்சல் (Rachel). தமிழில் இவர் தல அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதில், ''எனக்கு கொரோனா பாதித்திருப்பதை ஏற்றுக்கொள்வதற்கு 2 நாட்கள் ஆனது. நான் எப்பொழுதும் கூடுதல் கவனமுடன் இருப்பேன் என்பதால் இந்த தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் ஏன் எனக்கு என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நமக்கு வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் சொல்லும் அனைத்தையும் முறையாக கடைபிடியுங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.