நடிகர் சிம்புவுக்கு விதிக்கப் பட்டிருந்த, ரெட் கார்டு விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது அதிரடி முடிவினை எடுத்து இருக்கிறது.
நடிகர் சிம்புவின் கடந்த கால திரைப்படங்கள் தொடர்பாக நான்கு தயாரிப்பாளர்கள் தங்கள் தரப்பு பிரச்சினைகளை முன்வைத்ததை அடுத்து இந்த விவகாரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சிம்பு மற்றும் சிம்புவின் தாயார் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் சென்றது.
இதனிடையே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும் வரை பெப்சி தொழிலாளர்கள் சிம்புவின் திரைப்படங்களில் பணியாற்றக் கூடாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திடம்(பெப்சி) ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. பெப்சி அமைப்பும் இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்திருந்தது.
இதில் சிம்புவின் தாயார் அண்மையில் பேசும்போது, சிம்பு தொடர்பான பிரச்சனைகள் பேசித் தீர்க்கப் பட்டுவிட்டதாகவும், எஞ்சிய சிக்கல்கள் கோர்ட்டில் இருப்பதாகவும், அதை கோர்ட்டில்தான் தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக நீக்கி இருக்கிறது. மேலும் சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்துக்கு தொழிலாளர் சம்மேளனம் ஒத்துழைப்பு அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சிம்புவின் தாயார் குறிப்பிட்டதுபோல், மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது அங்கே முடிவு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கமும் தம்முடைய தரப்பில் தற்போது தெரிவித்திருக்கிறது.
இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு அடுத்து தொடங்கப்பட உள்ளது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணையும் இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதே கூட்டணி பணியாற்றிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 2010-ல் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: KGF தயாரிப்புடன் கைகோர்க்கும் ‘சூர்யாவின்’ ஹிட் பட இயக்குநர் ?? சம்பவம் இருக்கு போலயே..