இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நீண்ட நாட்களாக தொடர்ந்து வருவதால் பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தற்போது மெள்ள இயல்பு நிலை மீண்டு வரும் போலுள்ள சூழலில், சில திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட வேலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதுள்ளது.
டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் படமான‘சரிலேரு நீக்கெவரு’ கடந்த ஜனவரி மாதம் ரிலீஸானது. ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து, ரவிபுடி இயக்கத்தில் வெளியான அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இன்று, (மே 31) மகேஷ் பாபுவின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள். இதனை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனர் பரசுராம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார்.
சர்காரு வாரி பாட்டா என்று இந்தப் படத்துக்கு டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடி யார், வில்லன் யார் என்று இன்னும் தீர்மானம் ஆகவில்லை. பிற படக்குழுவினர் பற்றிய முழுமையான தகவல்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர். படத்துக்கு தமன் இசையமைக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.