உலகமே கொரோனா தொற்று நோய் பிரச்சனையில் ஸ்தம்பித்து மெள்ள மீண்டு கொண்டிருக்க, திரை உலகம் பெரும் சிக்கலில் உள்ளது. லாக்டவுன் முடிந்தால் தான் பல படங்கள் தியேட்டரில் வெளியாகும், பாதி முடிக்கப்பட்ட நிலையிலுள்ள படங்களின் ஷூட்டிங் தொடரும்.
இந்நிலையில் ரிலீஸுக்குத் தயாரான சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இது ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பி வந்தாலும் இது அந்தந்த தயாரிப்பு நிறுவனத்தின் முடிவென்பதால் பிரச்சனை தொடரவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று இந்தியப் படங்கள் சமீப காலமாக நேரடியாக அமேஸான் ப்ரைம் அல்லது நெட்ப்ளிக்ஸில் வெளியாகத் தொடங்கி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
இந்நிலையில் ஒரு தெலுங்குப் படம் கூட ஓடிடியில் வெளிவந்திராத நிலையில், தற்போது 'கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ என்ற படம் அதிக பரபரப்பின்றி நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சித்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷீரட் கபூர், ஷாலினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் புரொடக்ஷன்ஸ், வயகாம் 18 மற்றும் சஞ்சய் ரெட்டி மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
ரவிகாந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என படக்குழுவினரால் விளம்பரத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 24) திடீரென்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்தப் படம் வெளியானதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது.
இந்தப் படத்துக்கு முன்னால் அனுஷ்கா நடிப்பில் உருவான 'நிசப்தம்' ஓடிடி தளத்தில் ரிலீஸாக திட்டமிடப்பட்டுப் பின் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.