தீபாவளி ஸ்பெஷலாக சர்தார், பிரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் அக்டோபர் 21 ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் இரு படங்களின் திரை அரங்கு எண்ணிக்கை தொடர்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றிருந்த நடிகர் கார்த்தி, அடுத்ததாக 'சர்தார்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
'இரும்புத்திரை', 'ஹீரோ' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் சர்தார் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கன்னாவும், ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரிப்பழகி என அழைக்கப்படும் நடிகை லைலாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சர்தார் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள நிலையில், தீபாவளி விருந்தாகவும் இந்த திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதியன்று வெளியாகிறது.
அதே போல, தமிழில் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் தவிர்த்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ப்ரின்ஸ்' திரைப்படமும் அக்டோபர் 21 ஆம் தேதியில் வெளியாகிறது. 'ஜதி ரத்னலு' பட இயக்குனர் அனுதீப் கே.வி.யின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.
இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், சர்தார் மற்றும் ப்ரின்ஸ் ஆகிய படங்களின் தமிழக திரை அரங்குகளின் எண்ணிக்கை பற்றிய தகவல் ஒன்று, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. அதன்படி, ப்ரின்ஸ் திரைப்படம் 427 திரை அரங்குகளிலும், சர்தார் திரைப்படம் 390 திரை அரங்குகளிலும் வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படமும் தற்போது 227 திரை அரங்குகளில் ஓடி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம், உலகளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.