நடிகை சாய் பல்லவி தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சயமான தென்னிந்திய முன்னணி நடிகை ஆவார்.
நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி அண்மையில் நானியுடன் இணைந்து ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது. முன்னதாக நடிகை சாய் பல்லவி பிரேமம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.
சாய் பல்லவி ரசிகர்கள்
அவருடைய நடிப்பு, சிரிப்பு, ஹேர் ஸ்டைல், டான்ஸ் என பலவற்றுக்காகவும் அவரை பிடித்திருந்தாலும் சில குறிப்பிட்ட ரசிகர்களுக்கு சாய் பல்லவியின் கன்னத்தில் இருக்கும் முகப்பருக்கள் ஸ்பெஷலானவையாகவே குறிப்பிட்டு பிடிக்கும் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்.
இணைய சர்ச்சை
எனினும் அழகு என்பதற்கான பொது இலக்கணங்கள் பொதுப்புத்தியில் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் உருவ கேலியும், கிண்டலும் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் அவை பற்றியும் சிலர் பேசுவதாகவும் குறிப்பிட்டு பல்வேறு கலவையான பதிவுகள் கடந்த 2 நாட்களாக இணையத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.
சாய் பல்லவி குறித்த சர்ச்சை பதிவு
அதன்படி அண்மையில் ஒரு நபர் தம் ஃபேஸ்புக் பதிவில், “பெரிதாக சொல்லும் அளவிற்கு சாய் பல்லவி ஒன்றும் அழகில்லை. அவருடைய சிரிப்பில் ஒரு வசீகரம் இருக்கும். அது குழந்தைத்தனமாக இருக்கும். பல வருடங்களாக டான்ஸ் கற்றுக் கொண்டு இருந்ததால் நடிப்பிலும் சரியான அபிநயத்தை கொண்டு வரமுடிகிறது. இங்கு இருக்கும் பலரை விடவும் சாய் பல்லவி ஒரு நல்ல நடிகைதான்.
என்றாலும் கூட அவர் அழகி கிடையாது. அவருடைய தாடை கரடுமுரடானது. சாய்பல்லவிக்கு யானைக் காதுகள். அவருடைய சாமர்த்தியமான கூந்தலால் அவர் பல திரைப்படங்களில் காதுகளை மறைக்கிறார். இப்படி பல அவலட்சணங்கள் அவரிடம் இருக்கிறது, அவற்றை கேமரா ஆங்கில் மூலமாக சரிசெய்து கொள்கிறார்கள். சாய்பல்லவியின் மற்ற திறமைகளை பற்றி சொல்வது எனக்கு பிரச்சினைகள் இல்லை. ஆனால் அவர் அழகு என்று சொல்வது பற்றி தான்!” என்று அந்த நபர் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இப்போது இருக்கும் பார்வையாளர்கள் நேச்சுரலாக இருப்பதையே அழகென ஏற்கிறார்கள். ஒரு சிலரின் இப்படியான உருவகேலிகள் தொடர்ந்தாலும் பெரும்பான்மை சமூகம் சிறிய அளவில் தெளிவாக இருக்கும் பலரால் மாறிக்கொண்டிருக்கிறது.
எனக்கும் நடந்திருக்கு.. உழைப்பால், தன்னம்பிக்கையால் எதிர்கொள்ளுங்கள்
இதனிடையே இந்த விஷயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட செய்தி ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசியதை தமது ட்விட்டரில் பகிர்ந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ‘நானும் உருவ கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறேன். நான் இந்த காயங்களை புறந்தள்ளிவிட்டு போயிருக்கிறேன். குள்ளச்சி, நெட்டச்சி, கருப்பி என சொல்பவர்கள் நம்மை காயப்படுத்தும் நோக்கில் சொல்லும்போது, அதை நம் திறமையாலும், செய்யும் பணியாலும், உழைப்பாலும் தான் எதிர்கொள வேண்டும்.
இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த பாடி ஷேமிங் கண்டு பெண்கள் மன ரீதியாக தேங்கிவிட கூடாது, பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் இதுபோன்ற செயல்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.