சினிமா தொழிலாளர்களுக்கு பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் மருத்துவமனை கட்ட உள்ளது குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டி உள்ளார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது 67வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரை சினிமா, அரசியல், விளையாட்டு நிபுணர்கள் வாழ்த்தினர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் திரு.சிரஞ்சீவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவாதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள
சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படத்துறையில் ஏழை தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்" என தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக ஐதராபாத்தில் உள்ள சித்ராபுரி காலனியில் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறார். 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது செயல்பட தொடங்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.