இந்திய அளவில் பிரபலமான ஓவியர் இளையராஜா. இவர் தான் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார்.
43 வயதான இவரது மறைவுக்கு தமிழ் பண்பாட்டு மற்றும் கலை தளத்தில் பேரிழப்பாக கருதப்படுகிறது. தமிழ் மற்றும் தென்னிந்திய கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர் இளையராஜா. தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜாவின் ஓவியங்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் பிரபலமான ஓவியக் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. பல பாராட்டுகளையும் குவித்துள்ளன.
வளரும் இளம் ஓவியக் கலைஞர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இளையராஜா, இப்போது நம்பிக்கை ஒளியாக மாறியிருக்கிறார். ஆம், அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இளையராஜா. நேற்று நள்ளிரவு மாரடைப்பால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களால் தனது ஓவியங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவரும் மறைந்த ஓவியருமான இளையராஜா கடந்து 2009ஆம் ஆண்டு திராவிடப் பெண்கள் என்ற தலைப்பில் நடத்திய ஓவியக் கண்காட்சி மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் வைரமுத்து தம் ட்விட்டரில், “ஓவியர் இளையராஜாவின் மறைவால் வானவில் ஒரு வண்ணத்தை இழந்துவிட்டது. இது ஒரு சித்திரச்சாவு. திராவிடக் கோடுகள் வழியே பயணப்பட்ட தமிழோவியன் இளையராஜா. வருந்துகிறேன்; இரங்குகிறேன். வண்ணக் கிண்ணம் இழந்த தூரிகைக்கு யார் ஆறுதல் சொல்வது?” என பதிவிட்டுள்ளார்.