கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியானது.
கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. கன்னட திரை உலகில், நட்சத்திர நடிகர்களாக உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘கே. ஜி எஃப்’ படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை தீபு எஸ் குமார் கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், என மூன்று சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் படவிழா சென்னையில் நடந்தது.
இந்த பட நிகழ்வில் பேசிய நடிகை ஸ்ரேயாவிடம் தமிழில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டீர்கள். ஏன் தமிழில் மீண்டும் அடுத்த படம் நடிப்பதற்கு இவ்வளவு தாமதம்? இந்த நீண்ட இடைவெளி உண்டானது ஏன்? என்று கேட்கப்பட்டது.
இதற்கு சிரித்தபடி பதில் அளித்த ஸ்ரேயா, "அதற்கு ரசிகர்ளாகிய நீங்கள் தான் காரணம். நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பை நிறுத்தி விட்டீர்கள்" என்று சொல்லி சிரிக்கிறார்.
அப்போது நிரூபர் தலையை ஆட்ட, "பார்த்தீர்களா.. அவரே கரெக்ட் என்று சொல்கிறார்" என்று சொன்ன ஸ்ரேயா, "நான் உண்மையில் சொல்கிறேன். நாம் முழு ஈடுபாட்டுடன் பணியைச் செய்கிறோம். சில வேலைகளில் படங்கள் ஒர்க் ஆகின்றன. சில வேலைகளில் ஒர்க் அவுட் ஆகாமல் போகின்றன. எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாமே இறைவன் அருள். எனினும் கண்டிப்பாக நான் தமிழில் முத்திரை பதிக்க விரும்புகிறேன். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறேன்" என்று கூறினார்.