தமிழ் திரைப்படங்களில், நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நடிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள அல்லி நாயக்கன்பாளையம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்.
இவரை பலரும் செல்லமாக லிட்டில் ஜான் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில், காமெடி நடிகராகவும் அவர் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்
சுமார் மூன்று அடி மட்டுமே உயரம் கொண்ட லிட்டில் ஜான், வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள கிராமங்கள் தோறும் சென்று, கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்களை மகிழ்விப்பதிலும் வழக்கமாக கொண்டிருந்தார்.
கோவில் கலை நிகழ்ச்சி
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில், பள்ளிப்பாளையம் அருகே அமைந்துள்ள மோடமங்கலம் என்னும் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்துள்ளது. அப்போது, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியிலும் லிட்டில் ஜான் கலந்து கொண்டுள்ளார்.
அதிர்ந்து போன குடும்பத்தினர்
தொடர்ந்து, நிகழ்ச்சியை முடித்து விட்டு, தனது வீட்டிற்கு சென்று தூங்கிய லிட்டில் ஜான், மறுநாள் காலையில் எழுந்திருக்கவே இல்லை. இதனால், பயந்து போன குடும்பத்தினர், லிட்டில் ஜானை சென்று பார்த்த போது, அவரது வாய் மற்றும் மூக்கு பகுதியில் ரத்தம் வந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ந்து போன அவர்கள், உடனடியாக லிட்டில் ஜானை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் உயிரிழந்துள்ள சம்பவம், தமிழ் சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.