நடிகை தமன்னா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடிப்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார்.
அண்மையில் இந்தியில் உருவான பப்ளி பவுன்சர் படத்திலும் தனி கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியானது.
மேலும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ படத்திலும் தமன்னா நடித்திருந்தார். இந்த ரொமான்டிக் காமெடி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
தெலுங்கில் குருதுண்டா சீதாக்களம் படத்தில் தமன்னா நடித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. தமன்னா நடிப்பில் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.
தெலுங்கில் தற்போது, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சீரஞ்சீவிக்கு ஜோடியாக 'போலோ ஷங்கர்' படத்திலும் தமன்னா நடிக்கிறார். மலையாளத்தில் நடிகர் திலிப் நடிக்கும் 147வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா பாட்டியா நடிக்கிறார்.
இந்நிலையில் தமன்னா பாட்டியா, தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிப்பது குறித்து முதல்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இப்போது இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் உடன் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதன் அனுபவங்களை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்". என தமன்னா பதிவிட்டுள்ளார். மேலும் ஜெயிலர் படத்தின் போஸ்டர்களையும் பகிர்ந்துள்ளார்.