சிம்பு நடிப்பில், ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வெந்து தணிந்தது காடு படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கௌதம் மேனனுடன் நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய நடிகர் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர், “ஒரு வைரக்கல்லை தங்க தட்டில் வைத்தாற்போல், சிம்புவின் நண்பர் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தின் கீழ் இப்படம் ரிலீஸ் ஆகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் போல, ‘ங்கொப்பன் மவனோ’ என நான் சிம்புவை எனது ஒரு வசந்த கீதம், எங்க வீட்டு வேலன், மோனிசா என் மோனலிசா, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி ஆகிய பல படங்களில் நடிக்க வைத்தேன். எங்க வீட்டு வேலன் படத்தில் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வைத்தேன். அப்படிப்பட்ட என் பையனுக்கு விருது வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.
ஏனென்றால் இந்த படம் குறித்து எழுத்தாளர் இப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் ஒன்றை பார்த்தேன். அவர் பேசும் பொழுது கூறினார், ‘இந்த படத்தில் முத்து எனும் கதாபாத்திரத்தின் வயது 21. பட்டினி கிடந்து உடல் ஒட்டி இருக்கக்கூடிய கதாபாத்திரத்தை வைத்து இதை எழுதினேன். இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நடிகர் சிம்பு பொருந்துவாரா என்பது எனக்கு தெரியவில்லை. கௌதம் மேனன் அவரை தயார் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு முயற்சியில் இறங்கினார். ஆனால் சிம்பு ஒரு மண்பாண்ட கலைஞன் மண்ணை குழைத்து பானை வனைவது போல, ஒரு பொற்கொல்லர் பொன்னை உருக்குவது போல இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக உடலை உருக்கி இளைத்து உழைத்து அவ்வளவு கஷ்டப்பட்டார்.” என்று ஜெயமோகன் சிம்புவை பாராட்டினார்.
என்னிடம் சிம்பு அப்பா என்னால் முடியுமா என்று கேட்டார். முடியும்ப்பா.. முடியும் என்று நினைத்தால் எல்லாம் முடியும்.. என்று கூறினேன். அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தின் போட்டோ ஷூட்டை எடுத்தார். அதை பார்த்துவிட்டு 21 வயசு அல்ல 18 வயசு பையன் மாதிரி இருக்கிறான் என்று ஜெயமோகன் கூறினார். திருநெல்வேலியில் இருக்கும் முத்து எனும் கதாபாத்திரத்தின் உடல் மொழிக்கு ஏற்ப சிம்பு நடித்த நடிப்பை பார்க்கும் பொழுது எனக்கு சிம்பு தெரியவில்லை, அந்த கதாபாத்திரம் முத்து தான் தெரிந்தது என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் மிகப்பெரிய இயக்குனர்களை கண்ட எதார்த்தமான எழுத்தாளர்.
அவர் சிலம்பரசன் பற்றி இப்படி சொல்லும் போது எனக்கே என் மகன் எவ்வளவு பெரிய பாராட்டை, கைதட்டலை, விசிலை பெற்றிருக்கிறார், விருதுக்கெல்லாம் நான் விரும்பவில்லை. ஒரு எழுத்தாளராக, சிம்பு குறித்து அவர் சொன்னதை கேட்கும் பொழுது எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை. அவர் எத்தனை பேருக்கு இப்படி கூறியிருக்கிறார்? இதெல்லாம் யாருக்கு கிடைக்கும். ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமென்றால் ஜாதகம் வேண்டும். ஒரு கலைஞன் வெற்றி பெற வேண்டும் என்றால் ஊடகம் வேண்டும். எனவே ஊடகத்திடமும் ஆதரவு கேட்டுக்கொள்கிறேன் நன்றி” என்று பேசினார்.