பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து, பின்பு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகில், குறிப்பாக இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பேரரசு, சாமி, சிநேகன், சிற்பி, சங்கர் கணேஷ், ரமேஷ் கண்ணா, பாபு கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்ட இந்த நினைவேந்தலில் பேசிய நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் டி.ராஜேந்தர், “வாசமில்ல மலரிது பாடலை பாடிய அந்த பாசமில்லா மலருக்கு மலரஞ்சலி செலுத்துறேன். அவரது கண்மூடி பார்த்திருக்கேன். அவர் வாய் மூடி கிடந்ததை நான் பார்க்க விரும்பவில்லை.
பல இதயங்களில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். என்னுடைய வாசமில்லா மலரிது பாடலுக்கு ட்யூன் சொல்ல சொல்லி எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேட்டார். அந்த பாடலை பாடும்போது ஒரு சிறிய சிரிப்பு வரவேண்டும் என்றேன். அனைவரும் எப்படி முடியும் என்று சிரித்தனர். நான் பாடி, சிரித்து காட்டினேன். அனைவரும் மிரண்டனர். ஒரு கலைஞனை முளையிலேயே கிள்ளாதீர்கள்.” என்று பேசினார்.
மேலும், பேசியவர், “ஒரு பொன்மானை நான் தேடி தகதிமிதோம் பாடலை பாடி காட்டியபோது, அந்த தத்த தகதிமி பாடணுமா என எஸ்பிபி கேட்டார்.” என்று குறிப்பிட்ட டி.ராஜேந்தர், “வைகைக் கறை காற்றே நில்லு பாடலை ஜேசுதாஸ் அவர்களுக்கு கொடுத்தேன். பாடல் ஹிட். படமும் ஹிட். பாலு அண்ணன் கோபமாகி, என்னை அழைத்து கேட்டார். நான் தெலுங்கில் நீங்கள் தான் அண்ணேன் அந்த பாட்டை பாடவேண்டும் என்று சொன்னேன்.
நெஞ்சம் பாடும் புதிய ராகம் பாடலின் ட்யூன் எஸ்.ஜானகி அம்மாவுக்கு சொன்னேன். அப்போது எஸ்.பி.பி எனக்கு என்ன லிரிக்ஸ்? என்றார். ‘உங்களுக்கு லிரிக்கே கிடையாதுண்ணேன்’ என்றேன். ஆர் யு ஜோக்கிங்? என்றார். ஆமாண்ணே.. சொல்கட்டு மற்றும் ராக ஆலாபனைதான். இடையிடையே வரும் என்றேன். ‘என்ன விளையாடுறியா ராஜூ?’ என்றார். அண்ணேன் சொன்னா கோச்சுக்காதீங்க. இந்த பாட்டை நீங்க பாடணும்னு சொன்னேன். அப்படி அவர்கிட்ட அடம்பிடிப்பேன்.
மேடையில் பேசுவதை விட்டுட்டேன். யாரையும் சந்திப்பதில்லை. கொரோனா வந்ததில் இருந்து மனம் கஷ்டமாக இருக்கிறது. நிறைய பேர் கொரோனாவால் மறைந்தார்கள். பல கலைஞர்கள் உயிரிழந்தார். பாலு அண்ணன் மறைவுக்கு கூட போகல. அந்த துக்கத்தை இறக்கி வைக்கவே இந்த நினைவஞ்சலிக்கு வந்தேன். பாடும் நிலா பாலு பட்டம் நான் தான் கொடுத்தேன் என்று அடித்துக்கொள்ளவில்லை தம்பட்டம். வானத்தில் நிலா இருப்பது போல, கானத்தில் இந்த நிலா இருக்கும்.” என்று குறிப்பிட்டார்.