தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர்தாஸ்’ அணியினர் கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.
வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார். இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான ‘பாண்டவர்’ அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர்தாஸ்’ அணியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியினர் இன்று நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர். விருகம்பாக்கத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் பாக்யராஜ், உதயா, பிரஷாந்த், குட்டி பத்மினி மற்றும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர். விஜயகாந்தை சந்தித்த அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கர்தாஸ் அணியினர், ‘எங்கள் அணிக்கு நடிகர் விஜயகாந்த் ஆதரவு அளிப்பதாக தெரிவித்ததுடன், எங்கள் அணி வெற்றி பெறும் என்றும் வாழ்த்தினார்’ என கூறினர். மேலும், பாக்யராஜ் தெரிவித்த ஓட்டுக்கு பணம் வாங்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நாடக நடிகர்கள் ஓட்டுக்கு பணம் பெறுவார்கள் என நான் கூறவில்லை. தேர்தலில் ஓட்டுக் கேட்க செல்லும்போது நலிந்த கலைஞர்கள் ஏதேனும் உதவி கேட்டால் அதனை மறுக்க முடியாது என்பதையே கூறினேன்’ என்றார்.
இந்த நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை என்பதையும், நடிகர் சங்க கட்டிடத்தை விரைந்து முடிக்கவும், நாடக கலைஞர்களின் நலன் மட்டுமே தங்களது நோக்கம் என்றும் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.