தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றான சூர்யவம்சம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சூர்யவம்சம்
சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், ஆனந்த்ராஜ், சுந்தர்ராஜன் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் R B சௌத்ரி தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘சூர்யவம்சம்’. 1997 ஆம் ஆண்டில் வெளியாகி அந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக ஆனது. அதன் பின்னரும் தொலைக்காட்சி மற்றும் யுடியூபிலும் கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது. இந்த திரைப்படம் ரிலீஸாகி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு படத்தின் கதாநாயகன் சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் படத்தை பற்றிய தன்னுடைய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சரத்குமாரின் நாஸ்டால்ஜியா
அவரது பதிவில் “ஆர்.பி.சௌத்ரி தயாரித்து இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான சூர்யவம்சம் திரைப்படத்தில் பணிபுரிந்த நாட்களை நினைவுகூருவதற்கு இது ஒரு ஏக்கம் நிறைந்த தருணம். சூர்யவம்சம் ஒரு அற்புதமான மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படமாகும், இது இன்றுவரை திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்த திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஒரு வருடம் ஓடியது சாதாரண சாதனை அல்ல. படத்தை விரும்பி ஆதரித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் ஊக்கத்தை மறக்க முடியாது. மீண்டும் அப்படியொரு படத்தை கொடுக்க கடினமாக உழைப்பேன்.” எனக் கூறியுள்ளார்.
சூர்யவம்சம் memes
சமுகவலைதளங்களின் வருகைக்குப் பின்னர் இந்த திரைப்படம் அதிகளவில் ரசிகர்களால் நினவுகூரப்படுகிறது. இந்த படத்தின் பல காட்சிகள் சமூகவலைதளங்களில் மீமாக ட்ரண்ட் ஆகியுள்ளன. குறிப்பாக ‘சின்ராச கையிலேயே புடிக்க முடியாது’ ‘காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா’ மற்றும் ‘பாயாசம் சாப்பிடுங்க ப்ரண்ட்’ போன்ற காட்சிகள் ரசிகர்கள் பலராலும் அடிக்கடி பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சரத்குமாரின் நினைவூட்டல் பதிவை அடுத்து பலரும் படம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர ஆரம்பித்துள்ளனர்.