தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான நடிகர் சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த 'சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.
‘மாறா’ எனும் ‘நெடுமாறன் ராஜாங்கம்’ கதாப்பாத்திரமாகவே சூர்யா இந்த படத்தில் வாழ்ந்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தின் வாழ்க்கைப் பயணமே 'சூரரைப் போற்று' படமாக உருப்பெற்றது. ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டம்.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரையாக்கம் செய்யப்பட்ட 'சூரரைப் போற்று' படம், 78-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்ட பத்து இந்திய மொழி திரைப்படங்களில் ஒன்றாக திரையிடப்பட்டது. மேலும் 93-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் 'சூரரைப் போற்று' திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
IMDB தளம் தொடங்கப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் 9.1 சதவீதம் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஒரே இந்திய மொழித் திரைப்படம் 'சூரரைப் போற்று' மட்டுமே. 'சஷாங் ரிடம்ஷ்ன்', 'காட் ஃபாதர்' போன்ற உலகத் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக 'சூரரைப் போற்று' இடம்பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது.
இத்தகைய பெருமை வாய்ந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் வெளிவர இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, பிரபல நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள். சூரரைப் போற்று இந்தி திரைப்படத்தை: சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தி ரீமேக் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், “சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது. உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களை தொடர்ந்து தந்துவரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது” என சூர்யா தெரிவித்தார்.
இந்த படத்தின் நிஜ, நாயகரான கேப்டன், ஜி.ஆர்.கோபிநாத் குறிப்பிடும்போது, “படத்தின் இயக்குநர் சுதா 'என் கதையைச் சொல்ல வேண்டும்' என்று என்னை அணுகியபோது நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணமும் என்னை ஒப்புக்கொள்ள வைத்தன..! சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தங்கள் கனவுகளைத் துரத்த குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. தற்போது இந்தி ரீமேக்கையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.
அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, “மக்களிடம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மீது எங்களுக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு.! பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்பதையே எங்கள் நிறுவன திரைப்படங்கள் எப்போதும் முயற்சித்து வருகின்றன. 'சூரரைப் போற்று' திரைப்படம் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களுக்கும் கொண்டு செல்வதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.!
We are thrilled to announce that #SooraraiPottru is being made in Hindi! Thank you for your love and support!#SooraraiPottruInHindi@CaptGopinath #SudhaKongara #Jyotika @Suriya_offl @vikramix @rajsekarpandian @ShikhaaSharma03 @Abundantia_Ent pic.twitter.com/LKlmpWVM5g
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 12, 2021
குறிப்பாக, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் ஆகியோருடன் இணைவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது.! இதுபோன்ற உயர்த்தரமான படைப்புகளை தொடர்ந்து தந்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன். இயக்குநர் சுதாவை இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தக் கதையை உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு அவர் எப்போது தருவார் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்!” என்று தெரிவித்தார்.