'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவரது பேட்டிங் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் சச்சின், அவ்வப்போது சுற்றுலா, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் என பிஸியாக வலம் வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சச்சின் அங்கு மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பெனாலியம் கடற்கரையில் பாரம்பரிய முறையில் மீன்பிடித்த மீனவர்களை சந்தித்து பேசுவது போல அந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகியது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிங்க் சிட்டி’யான ஜெய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பாரம்பரிய ராஜஸ்தானி காலை உணவு உண்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சச்சின், "இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது 😃. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, மனமார்ந்த வாழ்த்துக்கள் சூர்யா" என தமிழிலேயே பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ் நடிகர் சூர்யா, சச்சின் டெண்டுல்கரின் தாய் மொழியான மராத்தியில், "तुम्हाला भेटून आनंद झाला, आणि सन्मनिथ वाटले #masterblaster #marathi" கமெண்ட் செய்துள்ளார். இதற்கு "உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பெருமையாக உணர்கிறேன்." என அர்த்தமாகும்.