ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்' திரைப்படத்தின் கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார். இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து விசிக தொல். திருமாவளவன் MP கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நன்றி தெரிவித்து சூர்யா தற்போது திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன. மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதைப் போல, மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனபடுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.அன்புடன், சூர்யா என குறிப்பிட்டுள்ளார்.