இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசுடன் கைகோர்த்து மாநில அரசுகளும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியும் வலுப்படுத்தியும் வருகின்றன.
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திறமான சிகிச்சைகள் வழங்குவதன் மூலம், கொரோனாவை எதிர்கொள்வதற்கான முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ் தாராளமாக யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு திமுக தலைமையிலான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் முன்னதாக விடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும், நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கின் தந்தையுமான சிவகுமார் தமது குடும்பத்தினர் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். இந்த நிதி அளிப்பது தொடர்பாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பூங்கொத்துகளையும் புத்தக அன்பளிப்பு பரிசுகளையும் அளித்த பின் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கான ரூ.1 கோடியை வழங்கினார்கள்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் சிவகுமார், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு உதவும் வகையில் தங்களால் முடிந்த ஒரு சிறிய அளவிலான நிதியை அளித்ததாகவும், மக்கள் இந்த கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஸ்டாலினி தந்தை கலைஞரை பலவாண்டு காலம் சந்தித்த தான், முதல்வராகியுள்ள அவரது மகனை இப்போது சந்தித்ததாகவும், தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைத்தால் தான் தமிழ் காப்பாற்றப்படும், ஆகவே தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் தன் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.