ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.
சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
1995-ல் தமிழகத்தில் ராஜாக்கண்ணு என்பவரையும் அவரை சார்ந்த பழங்குடி இருளர் இன மக்களையும் பொய் வழக்கில் சித்திரவதை செய்து, ராஜாக்கண்ணுவை லாக்கப் மரணத்துக்குள்ளாக்கிய காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை சித்தரிக்கிறந்து இப்படம்.
இப்படத்தில் நீதியரசர் சந்துருவை, நடிகர் சூர்யா பிரதிபலித்துள்ளார். இதில் ராஜாகண்ணுவாக மணிகண்டனும், அவரது மனைவி செங்கேனியாக லிஜோ மோல் ஜோஸூம் நடித்துள்ளனர். ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் கோர்ட் டிராமா காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. அந்த கோர்ட்டில் சூர்யா, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதிடுவார்.
ஷான் ரால்டன் இசையில், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில், கலை இயக்குநர் கதிரின் கை வண்ணத்தில் இப்படம் ஒரு பீரியட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நடிகர்கள், கலைஞர்கள் அனைவரும் பாராட்டப்பட்டு வருவதுடன், படம் உண்டு பண்ணிய சமூக தாக்கம் விவாதமாகவும் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் ஜெய் பீம் படத்துக்காக, கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பாக இருந்த மெட்ராஸ் ஹைகோர்ட் செட்டை ரீ-கிரியேட் செய்து அசத்தி இருக்கின்றனர் படக்குழுவினர்.
இதுகுறித்த பின்னணி காட்சிகள் ஜெய்பீம் Behind the Scenes என்கிற பெயரில் வெளியான வீடியோ தொகுப்பில், ஜெய்பீம் படத்துக்காக மெட்ராஸ் ஹைகோர்ட் உருவாக்கப்பட்ட விதம் குறித்து காட்டப்பட்டிருக்கிறது.
சுமார் 25 நாட்கள் எடுத்துக்கொண்டு அச்சு அசலாக ஜெய் பீமின் உண்மை கதை நடந்த மெட்ராஸ் ஹைகோர்ட் போலவே ஒரு கோர்ட்டை மறு உருவாக்கம் செய்வதற்கு கலைஞர்கள் உழைத்துள்ளதை, இப்படத்தின் இயக்குநர், ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆகியோர் விளக்கி இருக்கின்றனர்.
அத்துடன் இந்த செட் உருவாகும் பொழுது உண்மையான ஹை கோர்ட் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உண்மையில் இது ஹைகோர்ட் தான் என்பதுபோல் உணர்ந்ததாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நீதியரசர் சந்துரு இந்த செட் உருவாகும் பொழுது உடன் இருந்து தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். இதற்கென உண்மையான மெட்ராஸ் ஹைகோர்ட்டில் படக்குழுவினர் சில மணி நேரங்கள் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் கேமரா எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளுக்கு இடையே அவர்கள், கண்களாலேயே அங்கு இருக்கும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, பின்னர் நீதியரசர் சந்துரு கொடுத்த சில ஹைகோர்ட் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, ஜெய்பீம்க்கான செட்டப் ஹைகோர்ட்டின் உள்கட்டமைப்பை தத்ரூபமாக உருவாக்கி இருக்கின்றனர்.
பொதுவாக மெட்ராஸ் ஹைகோர்ட் என்றால் ஒரு தீர்ப்பு வரும்பொழுது, ஹைகோர்ட்டின் வெளிப்புறத்தை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். உள்புறம் எப்படி இருக்கும் என்பதை வழக்கமான கோர்ட் திரைப்படங்களில் நாம் பார்த்ததற்கும் மாறாக, ஜெய் பீம் படத்தில் வித்தியாசமாக இருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.
அதற்கு இந்தப் படக் குழுவினரின் உழைப்பு மிக முக்கியமான காரணம் என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிகிறது. இந்த வீடியோ அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.