சென்னையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற அகரம் 10வது ஆண்டு விழாவில் பேசிய சூர்யா இத்தனை ஆண்டு காலம் தங்கள் நிறுவனத்தில் பங்களிப்பாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்கள் சுயமுன்னேற்றத்துக்கும், கல்விக்கும் உதவி வரும் இந்த நிறுவனத்துக்கு தன்னை ஒரு அடையாளமாக முன்னிறுத்திக்கொள்வது மலிவான விஷயம் என்று குறிப்பிட்ட அவர் தானும் இதில் பணியாற்றும் தம்பி, தங்கைகளோடும் ஒரு சக பயணியே என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தை தொடங்க உந்துதலாக விளங்கியது, வாழை நிறுவனம் என்று கூறிய அவர். அதனை தொடங்கி மாணவர்களுக்கு தொண்டாற்றிய ஞானவேலனை மேடையில் அறிமுகம் செய்து கெளரவப்படுத்தினார். மேலும் இந்த நிறுவனத்தால் பயனடைந்த மாணவர்களில் வாழ்வை குறிப்பிட்ட அவர் தாயின் மரணத்தை நேரில் பார்த்த மாணவர் இன்று தன் மனவலிகளைக் கடந்து சிறப்பாக படித்துக் கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தார். இது போல பல மாணவர்களின் வாழ்வில் ஒளிபாய்ச்சிய இந்த நிறுவனத்தை எதிர்காலத்தில் விரிவுபடுத்த உள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்.