கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. அதன் காரணமாக திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அதிக எதிர்பார்ப்புக்குள்ளான நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து சூர்யா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''சூரரைப் போற்று' படத்தை அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.
தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக சூரரைப் போற்று நிச்சயம் அமையும்." என்றார்.
மேலும் ''சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு, ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன். பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.