“அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.
இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
அதன் பின்னர் நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே கதைக்களம்.
சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரமுகர்களும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை குவித்து வண்ணம் உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தை பாராட்டி டிவிட் செய்துள்ளார். அதில் சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது! வாழ்த்துகள்!! என்று குறிப்பிட்டுள்ளார்.
சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime @beemji @arya_offl 👏
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2021