ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்' திரைப்படத்தின் கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரம் பேசும் போது காட்சியின் பிண்ணனியில் குறிப்பிட்ட பிரிவின் 90களில் பிரபலமாக இருந்த குறியீட்டை காலண்டரில் பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அந்த காவல் உதவி ஆய்வாளரின் உணமை பெயர் அந்தோணிசாமி என்ற கிறித்தவ மதம் மாறிய மற்றொரு பிரிவை சேர்ந்தவர் ஆவார். இந்த வழக்கில் சட்ட போராட்டம் நடத்திய கம்யூனிச தோழர் மற்றும் வழக்குறைஞர் என இருவரும் படத்தில் 90களில் பிரபலமாக இருந்த இந்த காலண்டர் குறியீட்டை சார்ந்த பிரிவைச் சார்ந்தவர்கள்.
எனவே தவறான பதிவை இயக்குனர் இந்த படத்தில் செய்துள்ளதால் குறிப்பிட்ட காலண்டர் குறியீட்டு பிரிவினர் இயக்குனரிடம் விளக்கம் கேட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய காட்சி படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் இந்து மத பெண் தெய்வ படமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.