பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனமும் விலகியுள்ளது.
பாலாவும் சூர்யாவும் நந்தா & பிதாமகன் படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் 'வணங்கான்' படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
இப்படத்திற்கு தமிழில் வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் 'அச்சாலுடு' என பெயரிடப்பட்டது. இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குனராக மாயப்பாண்டியும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.
கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
.
இந்நிலையில் இயக்குனர் பாலா இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், "வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்'-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்.." என இயக்குனர் பாலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள சூர்யாவின் 2டி நிறுவனம், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்." என ட்வீட் செய்துள்ளது.
பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து @Suriya_offl அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். 🙏🏼 #Vanangaan pic.twitter.com/8jgJJtXyWI
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 4, 2022