நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படம் அண்ணாத்த.
குடும்ப திரைப்படமாக வரவேற்பையும் வசூலையும் பெற்று, டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப்பிலும் வந்த அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தளபதி விஜய், பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்தின் 169வது படமான பெயரிடப் படாத ‘தலைவர் 169’ படத்தை இயக்குவார் என சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு தற்போது ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், டைட்டில் லுக்கும் வெளியானது. சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் இந்த டைட்டில் லுக்கை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும்” என்று சொல்லி வாழ்த்து சொல்லி விரிவாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இது தொடர்பான அவரது அந்த ட்வீட்டில், “எத்தனை குதிரைகள் ஓடினாலும், ரஜினிகாந்த் என்கிற இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும். வாழ்த்துகள் நெல்சன் திலீப்குமார் டீம், சன் பிக்சர்ஸ்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி, மிக மிக அவசரம் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் என்பதும், சுரேஷ் காமாட்சியின் வீ ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நிவின் பாலி நடிப்பில், இயக்குநர் ராம் இயக்கும் அடுத்த திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.