சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பெற்றோருக்கு அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் மார்பளவு சிலை எழுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். பெற்றோர் மீது பிள்ளைகள் பாசமாகவும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என தன்னுடைய பல படங்களின் மூலம் உணர்த்தி வந்தவர் ரஜினிகாந்த்.
இதனிடையே, தனது பெற்றோர் வாழ்ந்த கிராமத்தில் அவர்களுக்கு மார்பளவு சிலையை ரஜினி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது நாச்சிக்குப்பம் எனும் கிராமம். தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லைகளும் அருகருகே அமையப்பெற்ற இடம் இந்த நாச்சிக்குப்பம்.
இந்த கிராமத்தில் ரஜினியின் பெற்றோர் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது சிதிலமடைந்த நிலையில் இருக்கும் ரஜினியின் பூர்வீக வீட்டை இடித்து, அங்கே பெற்றோருக்கு மண்டபம் அமைக்கும் பணிகளில் ரஜினி இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய பெற்றோர் வாழ்ந்த இடத்தில், அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்பது ரஜினியின் நெடுநாள் விருப்பமாக இருந்ததாகவும் அதனை தற்போது அவர் பூர்த்தி செய்துவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விரைவில் தனது பெற்றோருக்கு ரஜினி நினைவுமண்டபம் கட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.