90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும் ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என தமிழ் மொழியிலும் இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் மீனா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் பகிர்ந்து வரும் சூழலில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா, திரை உலகில் கால் பதித்து தற்போது 40 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது.
சமீபத்தில், 40 ஆண்டுகள் சினிமா உலகில் நடிகை மீனா நிறைவு செய்ததையொட்டி Behindwoods சார்பில் Meena 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை மீனா பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது, "மீனாவுக்கு நல்ல கதை ஞானம் உண்டு. படையப்பா படத்தின் கதையை மீனாவிடம் கூறிய போது ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மீனா முகம் குழந்தை தன்மை கொண்டது. அதனால் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் மீனாவை நடிக்க கேட்டேன். ஆனால் அவர் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க உறுதியாக இருந்தார். பின்னர் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் & நானும் எடுத்து கூறி மீனா படையப்பா படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதற்காக என் மீது மீனாவுக்கு இன்னும் கோபம் உள்ளது" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.