ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோ சர்வைவர். ரியாலிட்டி கொஞ்சம் சினிமாத்தனம் கொஞ்சம் என கமர்ஷியலாக உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மிகவும் பரபரப்பாகவும், திகிலாகவும், ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் வழங்கப்படும் டாஸ்குகள் மிரள வைக்கின்றன என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். இந்த ஷோவின் ப்ரோமோ வெளியானது முதலே இந்த ஷோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டனர் என்று சொல்லலாம். அதன்படி தமிழ் திரைத் துறையின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்கும் இந்த ஷோ, அண்மையில் தொடங்கி விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில் முதற்கட்டமாக எலிமினேஷன் ரவுண்டில் 2 பேர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ரவுண்டில் முதலில் ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் பட ‘பாண்டியம்மாள்’ கேரக்டரில் நடித்தவருமான இந்திரஜாவும், அவரைத் தொடர்ந்து நடிகை சிருஷ்டி டாங்கேவும் வெளியேற்றப்பட நாமினேட் செய்யப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காடர்கள், வேடர்கள் என இரண்டு பழங்குடி அணிகளாக பிரிக்கப்பட்ட இந்த போட்டியாளர்களில், ஒரு பழங்குடி அணியினரின் தலைவியாக கர்ணன் பட பிரபலமான லட்சுமி பிரியா சந்திரமௌலியும், இன்னொரு பழங்குடி அணித்தலைவராக காயத்ரியும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பழங்குடி அணி தலைவர்கள் இருவரும் யாரை சொல்கிறார்களோ அவர்கள் தான் வெளியேற்றப்பட வேண்டும், பொது ஓட்டு செல்லாது என்று அர்ஜுன் திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனாலும் சிருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா இருவரும் அந்த வாரம் எலிமினேட் செய்யப்படவில்லை. முதல் வாரமே எலிமினேட் செய்யப்பட மாட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தது போல, ரசிகர்களை ஏமாற்றாத வகையில், முதல் வார நிகழ்ச்சி இருந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் தீவிரம் அதிகமானது. காயத்ரிக்கும் சிருஷ்டிக்கும் நடந்த போட்டியில் காயத்ரி ஜெயித்தார். அதனால் சிருஷ்டி டாங்கே வெளியேறி இருக்கிறார். இப்போது மூன்றாம் உலகம் என்கிற அந்த தீவில் காயத்ரியும் இந்திரஜாவும் இருக்கிறார்கள்.
இதனிடையே வெளியேறிய சிருஷ்டி டாங்கே தன்னுடைய முதல் பதிவை பதிவிட்டிருக்கிறார். இது குறித்து தமது பதிவில், “டார்லிங் எனக்கு குட் பாய் சொல்வதற்கு பிடிக்காது.. சர்வைவர் ஷோ என்பது ஒரு ரியாலிட்டி ஷோவாக இருக்கலாம். நேர்மையாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல் எள்ளளவும் உண்மையான நிகழ்ச்சி இருக்காது. நீங்கள் டிவியில் பார்ப்பதெல்லாம் ஒரு சின்ன பிட் தான். அங்கு நிறைய விஷயங்கள் நடக்கின்றன.
நாம் ஒரு வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டு இருப்போம். அவற்றை எல்லாம் விட்டு விட்டு வேறு ஒரு காட்டுக்குள் சென்று வாழ்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. என்னுடைய சக போட்டியாளர்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் மிகவும் கவனமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு சௌகர்யமான வாழ்க்கை முறையில் இருந்து வந்தவர்களுக்கு இந்த சூழல் நிச்சயமாக கடினமாக இருக்கும். மனதளவில் கொஞ்சம் சுமையை தரலாம். அதேபோல் விரும்பியவர்களையும் குடும்பத்தினரையும் விட்டுவிட்டு வேறொரு இடத்தில் தனிமைப்பட்டு, நம்மைப்போல் தனிமைப்பட்டவர்களுடன் சேர்ந்து இருப்பது என்பது புதிய ஒன்றாக இருக்கும்.
தினசரி டாஸ்குகளை செய்ய வேண்டும். ப்ரஷராக இருக்கும். இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஷோவில் இருந்து நான் ஒன்று கற்றுக்கொண்டேன். சின்ன சின்ன விஷயங்களையும் நாம் பாராட்ட வேண்டும். நமக்கு ஒரு கருத்து இருக்கும். பார்வை இருக்கும். அதை வைத்து மட்டுமே நாம் யோசிப்போம். மற்றவருடைய பார்வையில் அதை நாம் யோசிக்க மாட்டோம். தோல்வி என்பது உண்மையில் தோல்வி கிடையாது. அது நமக்கு அனுபவம் என்று சின்ன வயதில் படித்திருப்போம். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன்.
இந்த ஷோவிலிருந்து வெளியே வந்ததை கூட ஒரு அடுத்தகட்ட முன்னேற்றப் படியாகவே நான் பார்க்கிறேன். நான் அந்த ஷோவில் இல்லாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக தான் இருக்கிறது. இருப்பினும் இதைப் பற்றி உங்களிடம் தினமும் பேசுவதற்கான வாய்ப்பாக இது இருக்கிறது. அது ஒரு ரியாலிட்டி ஷோ அவ்வளவுதான். ஆனால் இதில் நிறைய வலிகள் இருக்கின்றன. நிறைய கண்ணீர் இருக்கின்றது.
ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் போராட்டம் என அனைத்தும் நிரம்பியது.
இதை நான் என்றுமே மறக்க மாட்டேன். இந்த பயணம் முடிந்தாலும் அடுத்து ஒரு புதிய விஷயம் தொடங்க தான் போகிறது. எனக்கு அடுத்தடுத்து புராஜெக்ட்கள் நிறைய கைவசம் இருக்கின்றன. உங்களுடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. உங்களுடைய மீம்ஸ்களை நான் கண்டேன்.
அவை எனக்குப் பிடித்தன. இந்த ஷோ தொடங்கும்போது அர்ஜுன் சார் ஒரு விஷயம் கூறியிருந்தார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று.. அது உண்மைதான்!” என்று மிகவும் உருக்கமாக சிருஷ்டி டாங்கே குறிப்பிட்டுள்ளார்.