பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பலருக்கும் விருப்பமான பாடல்களை பாடியவர். உலகெங்கும் இருக்கும் இந்தியர்களால் விரும்பப்படும் லிஜெண்ட்.
இதுவரை பலமொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ஆம் வருடம் செப்டம்பர் 25-ஆம் தேதி உயிரிழந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உயிரிழப்பு திரைத்துறையினரிடையே மட்டுமல்லாமல், ரசிகர்கள் தரப்பிலிருந்தும் பெரும் சோகமாக கருதப்பட்டது. இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவு நாள் தற்போது அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்தும், அவருடைய பாடல்கள் குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்துமான நினைவலைகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, இசைக்கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நினைவலைகள் நிகழ்வில் பேசும்போது, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி குறிப்பிட்டு பேசிய உருக்கமான வீடியோ வெளியாகி இருக்கிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & இளையராஜா காம்போ பாடல்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அன்று முதல் இன்று வரை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் இசை உலகில் நீங்காத இடம் பெற்று இன்றும் ஒலித்து வருகின்றன. இதனிடையே எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, “எழுந்து வா பாலு” என்று இளையராஜா உரிமையோடு பேசிய வீடியோ உருக வைத்தது.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு துயர நிகழ்வு நடந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவர் குறித்த நினைவலைகளை தற்போது பகிர்ந்து கொண்ட இளையராஜா, “எஸ்பிபி பாடல் பாடல் பாடும் போது அவருடைய குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் ஒருவராகவே நான் இருந்தேன். பின்னால் நான் இசையமைப்பாளரான பிறகு அவர் என்னுடைய இசையில் பாடினார். அப்போதும் எங்கள் நட்புறவில் எந்த மாற்றமும் இல்லை.
அவரை அப்போதும் வாடா போடா என்று பேசி இருக்கிறேன். நீ இப்படி பாடு என்றெல்லாம் என் கற்பனையில் இருக்கும் ஒன்றை அவரிடம் சொல்லி பாட வைத்து இருக்கிறேன். அவர் என்னை புகழ்ந்து, நான் அவரை புகழ்ந்து, யாருக்கும் எதுவும் ஆக வேண்டியது இல்லை. அது வேற விஷயம். எனக்கும் அவருக்கும் எந்த மாதிரியான நட்பு என்பது உலகத்துக்கே தெரியும்.
என்னுடைய பாடலை பாடிய அவர், தன் உள்ளத்தில் எனக்கு எந்த மாதிரியான இடம் கொடுத்தார் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் கிரிட்டிகலான சூழலில் இருந்த போது, யாரையாவது பார்க்க விரும்புகிறீர்களா? என்று கடைசியாக கேட்டதற்கு ராஜா இருந்தால் வரச்சொல்லுங்கள் என்று கூறினாராம்.
இந்த வார்த்தை ஒன்று போதாதா? எந்த அளவுக்கு அவர் எனக்கு மனதில் இடம் கொடுத்து இருந்தால், என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கும்.
பிறகு ஒரு போனை வாங்கி போனில் இருக்கும் என்னுடைய படத்தை முத்தமிட்டு இருக்கிறார். எங்கள் இருவரின் உழைப்பினால் தான் அந்த பாடல்கள் உங்களை வந்து சேர்ந்திருக்கிறது. அவற்றுள் நாங்கள் இருவருமே இருக்கிறோம்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.