இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா தனது பிறந்தநாளை ஜுன் 2 ஆம் தேதி கொண்டாடுகிறார். இந்த வருட பிறந்தநாளின் போது 'இசை கொண்டாடும் இசை' என்கிற பெயரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இசைஞானியின் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்பிபி இளையராஜா ஒரே மேடையில் தோன்றியது இந்த படத்தில் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.
முதலில் இளையராஜாவின் புகழ் பெற்ற பாடல்கள் சில நாதஸ்வரம், தவில் ஆகியவற்றைக் கொண்டு வாசிக்கப்பட்டது. பின்னர் மேடையில் தோன்றிய இளையராஜா, தனது தாய் சகோதரர்கள், தனது குருக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ஜனனி ஜனனி பாடலை மிக உருக்கமாக பாடினார்.
பின்னர் 'நான் கடவுள்' படத்தில் இடம் பெற்ற ஓம் சிவோஹம் பாடலை மது பாலகிருஷ்ணன் பாட அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது. பின்னர் மேடையில் தோன்றிய எஸ்பிபி மடை திறந்து பாடலை பாடினார்.
அந்த பாடலில் 'இசைக்கென அமைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்' என்ற வரியை இளையராஜாவை தோளோடு தோள் சேர்த்து நமக்கே தான் என்று பாட மக்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பாடலைத் தொடர்ந்து பேசிய இளையராஜா, எஸ்பிபியை காண்பித்து 'இவன் எப்பொழுதுமே என்ன இசையமைப்பாளர் என்று ஏற்றுக்கொண்டதேயில்லை. இவன் பாடும் போது என்னை வெறும் ஹார்மோனியம் வாசிக்கிறவனாக தான் கருதுகிறான்' என்றார். அதற்கு எஸ்பிபி மறுப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மேடையேறிய அவரது மகள் பவதாரணி 'ராஜா வி ல்வயூ' என்று புதிதாக ஒரு பாடலே பாடினார். அதற்கு ராஜா, 'ராஜாவோட லவ் யார்கிட்ட இருக்கு தெரியுமா?' என்று மக்களை பார்த்து கை காட்டினார்.
அதனைத் தொடர்ந்து மேடையேறிய கமல்ஹாசன், 'வான வேடிக்கைகளை தவிருங்கள். ஏனெனில் ராஜாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை' என்று தனது ஸ்டைலில் நக்கலாக தெரிவித்தார்.
பின்னர் 'ஹேராம்' படத்தில் இளையராஜாவுடனான இசை அனுபவங்களை பகிர்ந்த கமல், 'ஹேராம்' படத்துக்கு முதலில் வேறு இசையமைப்பாளர் பணிபுரந்ததையும், அதற்கான பாடல் காட்சிகளை முதலில் படமாக்கி விட்டதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த இசையமைப்பாளருடன் எழுந்த பிரச்சனையின் காரணமாக இளையராஜாவிடம் சென்றதாகவும் கூறினார். தனக்கு செலவே இல்லாமல் படமாக்கப்பட்ட பாடல்காட்சிகளுக்கு ஏற்ப இசையமைத்ததாக பிரம்மிப்புடன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து 'விருமாண்டி' படத்தில் இடம் பெற்ற உன்ன விட பாடலை பாடினார். பின்னர் மேடையில் தோன்றிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மௌன ராகம் படத்தில் இடம் பெற்ற ஒரு முக்கியமான காட்சியை பின்னணி இசையுடனும், பின்னணி இசையில்லாமலும் காண்பித்து இளையராஜாவின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
பின்னர் யேசுதாஸ் அவர்களும் எஸ்பிபி அவர்களும் மேடையேறி தளபதி படத்தில் இடம் பெற்ற காட்டுக்குயிலு பாடலை இணைந்து பாடினார். அந்த பாடலின் தொடக்க இசையை கேட்டதும் எழுந்த ஆரவாரம் அடங்க சில மணி நேரங்கள் ஆனது. அந்த பாடலில் இடம் பெற்ற 'போடா எல்லாம் விட்டுத் தள்ளு. பழச எல்லாம் சுட்டுத்துள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா'' என்ற பாடலை கோரசாக மக்களும் பாடினர்.