கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் முத்தையா இயக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் செய்கிறது.
இந்த நிகழ்வின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூரி, தான் ஆடியோ விழாவில் பேசிய கருத்தை குறித்து மீண்டும் விளக்கியுள்ளார். நகைச்சுவை நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், அதிதி,சூரி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூரி, “சூர்யா அண்ணா பல உதவிகளை செய்து வருகிறார். ஆயிரம் கோயில்களை கட்டுறதை விட, ஆயிரம் ஆயிரம் அன்ன சத்திரம் கட்டறதைவிட ஒருத்தரை படிக்க வைக்குறது என்பது பல ஜென்மம் பேசும். அதை சூர்யா அண்ணன் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த விருமன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூரி தமது இந்த பேச்சு குறித்து குறிப்பிட்டுள்ள விளக்கத்தில், “நான் இசைவிழாவில் அன்றைக்கு கூறியிருந்தது எதார்த்தமாக சொன்னதுதான். ஆயிரம் அன்ன சத்திரம் கட்டறதைவிட ஒரு ஏழைக்கு படிப்பு கிடைப்பது பெரிய விசயம் என்றேன். ஆனால் நான் பேசியது யார் மனதையும் புண்படுத்துவதற்கானது அல்ல. நான் அப்படி கோயில்களுக்கு எதிராக அந்த கருத்தை சொல்லவில்லை. நான் சாமி கும்பிடுறவன் தான், நான் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன்.
மதுரையில் இருக்கும் என் எல்லா ஓட்டலுக்கும் அம்மன் பேர் தான் வெச்சிருக்கேன். அதை சிலர் தவறா புரிஞ்சுகிட்டாங்க.. நான் தாழ்மையுடன் கேட்டுக்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். நான் எந்த கோயிலுக்கும் எதிரானவன் இல்லை. காரணம் நான் படிக்காதவன், எனக்கு படிப்பு கம்மி. நான் படிக்கவில்லை என்பதால் நிறைய இடத்தில் மனம் உடைந்து போய் இருக்கிறேன்.
அன்னைக்கு அவ்வளவு ரசிகர்கள் வந்திருந்தார்கள். அங்க சொல்லாம வேற எங்க சொல்றது? இதை நான் சொல்லல.. மகாகவி பாரதியார் சொன்னதுதான்.. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியிருந்தார். எல்லாருக்கும் படிப்பு வேண்டும். அதை அந்த ஆத்தா மீனாட்சி அருள்வாள்!” என்று பேசினார்.