பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் பூ ராமு காலமானார்.
இயக்குநர் சசி இயக்கிய பூ திரைப்படத்தில் நாயகன் ஸ்ரீகாந்த்தின் தந்தையாக தமது அழுத்தமான நடிப்பை கொடுத்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ராமு. இதனால் இவர் பூ ராமு என அழைக்கப்பட்டு வந்தார்.
தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூ ராமு, தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்ர நடிகராக வலம் வந்தார். குறிப்பாக சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்திருந்தார். அவர் வரும் காட்சிகளில் தமது உணர்ச்சிமிக்க நடிப்பால் கலங்க வைத்திருப்பார். அத்தனை யதார்த்தமான நடிகர் பூ ராமுவை திரையுலகினர் அனைவருமே மரியாதைக்குரியவராக பார்த்தனர்.
இந்நிலையில்தான் நடிகை ‘பூ’ ராமு உடல்நலக் குறைவால் சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி திடீரென காலமாகியுள்ள தகவல் வெளியாகி திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிப்பு மட்டுமல்லாமல், முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர், நாடக, திரைக் கலைஞர் என பன்முகம் கொண்ட பூ ராமுவின் மறைவுக்கு திரையுலகினரும் எழுத்துலகினரும் அஞ்சலி செலுத்தி வருவதுடன், அவரது மறைவை தாங்க முடியாத் துயராக பதிவு செய்தும் வருகின்றனர்.