கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சாதனை படைத்தது. IMDB தரவரிசையில் 'தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்' மற்றும் 'தி காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை சூரரைப் போற்று பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் குன்னத் மோங்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் நமது Behindwoods தளத்துக்கு அளித்துள்ள விளக்கத்தில்,
கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து சூரரைப்போற்று படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்கு பேசியபடி வழங்கிவிட்டதாக கூறினார்.
மேலும் "கேப்டன் கோபிநாத் அவர்களுக்கு கதையின் உரிமைக்காக தந்த பணத்தை தவிர, குன்னத் மோங்காவின் சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு என்று தனியாக ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், குன்னத் மோங்காவின் இதர செலவுகளுக்காக ரூபாய் 80 லட்சம் செலவளிக்கப்பட்டதாகவும்" கூறினார். "ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை,” என்று ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறினார்.
“எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன, அடுத்த மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் பொழுது உண்மை தெரியும்” என்றும் அவர் தெரிவித்தார்.