பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த நிலையில், பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். இந்த வீடியோ பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
சோனு சூட்
பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.
கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதன்மூலம் நாடே சோனு சூட்டை பாராட்டியது. மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
ரயில் பயணம்
விலங்குகளிடத்தில் மிகுந்த பாசம் கொண்ட சோனு சூட் சில தினங்களுக்கு முன்னர் உள்ளூர் ரயிலில் பயணம் மேற்கொண்டார். மும்பையின் போய்சார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு ரயிலில் சென்ற சோனு சூட் சக பயணிகளிடம் பேசிக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்கள் மீது அன்பு செலுத்துமாறு அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த வீடியோவை சோனு சூட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அன்பு செலுத்துங்கள்
அந்த வீடியோவில் சோனு சூட்,"அடுத்த முறை ரயில்வே நிலையங்களில் நாய்களை பார்த்தால் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துங்கள். அவை எப்போதும் அதற்கு பதிலளிக்கும்" எனக் கூறுகிறார். இந்த வீடியோ வெளியாகி கொஞ்ச நேரத்திலேயே வைரலாகிவிட்டது. இதுவரையில் இந்த வீடியோவை 5.8 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், ஒரு மில்லியன் லைக்ஸ்களை இந்த வீடியோ பெற்றிருக்கிறது. இந்நிலையில், நெட்டிசன்கள் சோனு சூட்டின் செயலை வியந்து பாராட்டி வருகின்றனர்.