2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கிய இந்த திரைப்படம் ஆட்டோகிராஃப்.
இந்த திரைப்படத்தில் பா.விஜய் எழுதியிருந்த மிக முக்கியமான பாடல் ஒவ்வொரு பூக்களுமே பாடல். தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக ஹிட் அடித்த இந்த பாடல் கேட்டு உருகாதவர்களே அப்போதைய சூழலில் இருக்கமுடியாது. இப்போது வரை தன்னம்பிக்கை பாடலில் தவிர்க்க முடியாததாக இந்த பாடல் இருக்கிறது.
இந்த பாடலில் சினேகாவுடன் இணைந்து நடித்து பாடி இருப்பது போல் நடித்திருப்பவர் கோமகன். இந்த பாடல் காட்சியின் இறுதியில் அழுகை வரவழைத்திருப்பார். 2019ஆம் ஆண்டு கலைமாமணி விருது வாங்கிய கோமகன், 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குடும்பத்தின் கண்களாக விளங்கியவர் என்று சேரன் குறிப்பிட்டிருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளை வைத்து ஆர்கெஸ்டிரா குழுமத்தினை நடத்தி வந்த இவர், இவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு குறித்து சேரன் உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே நடிகை சினேகா இவர் பற்றி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். அதில் “என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நல்நினைவு, "ஒவ்வொரு பூக்களுமே" பாடல். அந்நினைவின் அற்புதமான பங்கு வகித்தவர் அன்பு சகோதரர் கோமகன்! அவரின் மறைவு மிகுந்த துயரளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும் குழுவிற்கும் அனுதாபங்கள் ”, என்று சினேகா தெரிவித்துள்ளார்.