தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யா, 1999ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். அதுவும் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன்பின் முன்னணி இயக்குனராக SJ சூர்யா இருப்பார் என்று சினிமா உலகமும் மக்களும் பெரிதும் எதிர்பார்த்தனர்.
அதன்பின் இயக்கத்தை நிறுத்தியவர், தனது நடிப்பு ஆசையை வெளிப்படுத்தியதுடன் அவரே இயக்கி நடிக்கவும் தொடங்கினார். நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களில் அவரே இயக்கி அவரே நடித்தார். குறிப்பாக இசை படத்தில் அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி போன்ற படங்களில் பிற இயக்குநர்களிடமும் பணியாற்றினார்.
நீண்ட வருடங்கள் கழித்து இறைவி படத்தில் நடித்தார். அந்தப் படத்திற்குப் பின் மெர்சல், ஸ்பைடர் மற்றும் தற்போது வெளியாகிய மாநாடு படத்தில் வில்லனாகவும் நடித்து பாராட்டையும் பெற்றார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் மான்ஸ்டர் படத்திலும் கதாநாயகனாகவும் நடித்தார்.
மாநாடு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கு கொண்டு பேசிய எஸ்.ஜே. சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இங்கு மற்றும் பல டெக்னிசியன்களின் உழைப்பைப் பற்றி பேசியிருந்தேன். ஆனால் இப்பொழுது மக்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒரு நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.
"மனம் திறந்த நன்றி, மனதிலிருந்து பாதம் தொட்டு நன்றி" என உருக்கமாக கூறினார். தொடக்கத்தில் இயக்குனராக வெற்றி கண்டவுடன் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக மாறிய பின் நான் தோல்வியடைந்து கீழே விழுந்தேன். அதற்குப் பின் வந்த இறைவி, ஸ்பைடர், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை படங்களுக்குப் நான் மீண்டும் எழுந்து விட்டேன் என மிகவும் நெகிழ்ச்சியாக கூறினார்.