சென்னை 04, பிப்ரவரி 2022:- மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.
அஷ்டகர்மா படக்குழுவினர்
ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.
இயக்குநர் விஜய் தமிழ்செல்வன்
முன்னதாக இந்த படத்தின் இயக்குநர் விஜய் தமிழ்செல்வன் பேசும்போது, “நான் மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் யாரிடமும் ஸ்கிரிப்ட் எடுத்துக்கொண்டு அலையவில்லை, இந்த நிறுவனத்திடம் மட்டும் தான் கதை சொன்னேன். கொரோனா உச்ச கட்டமாக சீனாவில் இருந்த காலத்தில் இந்தபடத்தை ஆரம்பித்தோம்.
இங்கு கொரோனா வராது என்று நினைத்தோம், கொரோனா வந்ததால் படம் லேட்டாகிவிட்டது. கிஷன் சார் மிகச் சிறந்த திறமைசாலி அவருக்கு கேமரா பயமே இல்லை. மிக அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் இருந்தது, எல்லோருக்கும் டி.ஆர் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம் ஆனால் அவரே எழுதி பாடி விட்டார். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் இது.
இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இசையில் L.V.முத்து கணேஷ் இரவு பகலாக உழைத்துள்ளார்கள். பாலா கிருஷ்ணா மனோஜ் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தை நன்றாக எடுத்துள்ளோம் தியேட்டரில் வந்து பாருங்கள் நன்றி.” என்று கூறினார்.
எஸ்.ஜே.சூர்யா மாஸ் பேச்சு
அதன் பிறகு இப்படம் குறித்து இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “அஷ்டகர்மா.. விஜய் அவர்கள் நல்ல கதையை உருவாக்கி, அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள்.
கிஷன் செல்வாக்கு மிகுந்தவர், அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம் ஒன்றை நோக்கி ஆசைப்பட்டு பயணித்துள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். சினிமா ஏழை பணக்காரன் என யாரையும் பார்க்காது, பஸ் கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றும். அந்த வகையில் உண்மையாக உழைக்கும் கிஷன் மிகப்பெரிய நடிகராக வர வாழ்த்துக்கள் நன்றி” என்று கூறினார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் அண்மைக்காலமாகவே நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு என அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்து வருகின்றன. தொடர்ந்து பல திரைப்படங்களில் அவர் கமிட் ஆகி நடித்துவருகிறார். இந்நிலையில் தான் அவர் “அஷ்டகர்மா” பட விழாவில் கலந்துகொண்டு எதார்த்தத்துக்காகவும், மோட்டிவேஷனாகவும் பேசி அசத்தியுள்ளர். “அஷ்டகர்மா” திரைப்படம் உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகிறது.