தனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ, ஷிரின், விக்னேஷ்காந்த் நடிப்பில் வெளியான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இந்த படம் கடந்த 14ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தனது படங்களில் வழிவிக்க ஒரு கருத்தை திணிக்க மாட்டேன் எனக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, 'இந்த டீமை பார்த்து பயம் இருந்ததாக எல்லோரும் சொன்னார்கள். எனக்கு பயத்தை விட நம்பிக்கை அதிகமாக இருந்தது. நம்பிக்கை இல்லாவிட்டால் படத்தை தயாரித்திருக்க மாட்டேன்.
ஸ்கிரிப்ட் படித்த பிறகு அதிகமாக நையாண்டி செய்ய வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டேன். படத்தின் கிளைமாக்ஸ் தான் என்னை தயாரிக்க சம்மதிக்க வைத்தது. நான் தயாரிக்கும் படம் மூலம் அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் என் நோக்கம். அது இந்த படம் மூலம் நடந்து இருக்கிறது
யூடியூப் டீமை வைத்து படம் என்றதும் நிறைய பேர் சந்தேகம் எழுப்பினார்கள். அப்போதுதான் நான் இதை தயாரித்தே ஆகவேண்டும் என்று உறுதி ஆனேன். எனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது. ஆனால் பிறர் தரும் அனுபவம் மூலம் கற்றுக்கொள்கிறேன்.
நான் தயாரித்த 2 படங்களிலுமே நல்ல கருத்து இருந்தது. ஒவ்வொரு படத்திலும் கருத்து இருக்க முயற்சி செய்வோம். ஆனால் கருத்தை திணிக்க மாட்டோம்', என அவர் கூறினார்.