‘நம்ம வீட்டி பிள்ளை’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ஹீரோ’ திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதற்கு முன்பாக ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘SK14’ திரைப்படத்திலும், அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘SK17’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘SK17’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை என்றும், இதனை ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, இப்படத்தை போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை என்ற்ம், லைகா நிறுவனமே தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.