இந்தியாவின் பிரபல பாடகரான கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத், தனது 53 ஆவது வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம், இசை ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தியில் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் குன்னத், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், எக்கச்சக்க பாடல்களையும் பாடி உள்ளார்.
அது மட்டுமில்லாமல், அவரது பாடலை ரசிப்பதற்கென்றே ரசிகர் கூட்டமும் அதிகம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த கேகே, இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
இசை நிகழ்ச்சியில் KK
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேகேவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மாரடைப்பின் காரணமாக கேகே உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதிர்ச்சியில் பிரபலங்கள்
கேகே மறைவு குறித்து அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 53 வயதே ஆகும் கேகே, தமிழில், உயிரின் உயிரே, காதல் வளர்த்தேன், ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் சரவணன் நடிப்பில், தி லெஜண்ட் படத்தில் இருந்து வெளியான பாடல்களில், 2 பாடல்களையும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடி இருந்தார் கிருஷ்ணகுமார் குன்னத்.
அப்படி இருக்கும் நிலையில், இசை நிகழ்ச்சி நடந்த வேளையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, கிருஷ்ணகுமார் குன்னத்தின் உயிர் பிரிந்துள்ள சம்பவம், ஏராளமானோரை கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆக்கியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கலையும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய உயிரே உயிரே மறைந்து விட்டது. அவருடைய கடைசி பாடலான 'கொஞ்சி கொஞ்சி'யை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்து சேர்ந்துள்ளது. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.