மறைந்த மகள் நந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு பாடகி சித்ரா உருக்கமான பதிவை எழுதியுள்ளார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
கே.எஸ்.சித்ரா என்ற கிருஷ்ணன் நாயர் சாந்த குமாரி சித்ரா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். பின்னணி பாடகரான சித்ரா இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதனாலேயே இவரை சின்னக்குயில் சித்ரா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார்.
ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் சித்ரா பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சித்ரா. இவர்களுக்கு 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், 2011-ம் ஆண்டு நந்தனா நீச்சல் குளத்தில் தவறிவிழுந்து மரணமடைந்தார். இந்நிலையில் இன்று நந்தனாவின் பிறந்தநாள் என்பதால் உருக்கமான பதிவு ஒன்றை சித்ரா எழுதியிருக்கிறார்.
அந்த பதிவில்,"சொர்க்கத்தில் இன்று தேவதைகளுடன் நீ பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருப்பாய். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உனது வயது என்றைக்கும் கூடாது. என்னை விட்டு தூரத்தில் இருந்தாலும் பத்திரமாய் இருப்பாய் என்று எனக்கு தெரியும். இன்றைக்கு கொஞ்சம் கூடுதலாக உன்னை மிஸ் பண்றேன். ஐ லவ் யூ. மிஸ் யூ. என் அன்புக்கு உரிய நந்தனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பலரையும் இந்த பதிவு நெகிழ்ச்சியடைய செய்திருக்கும் நிலையில், இந்த பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
— K S Chithra (@KSChithra) December 18, 2022