இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், வாகை சந்திரசேகர், மனோஜ், உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வந்துள்ளது மாநாடு திரைப்படம்.
பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து திரையரங்கில் 2021, நவம்பர் 25-ஆம் தேதி இப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பிரவீன் கே.எல்-லின் எடிட்டிங்கும் வெங்கட் பிரபுவின் நேர்த்தியான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகங்களின் மத்தியில் இருந்து மாநாடு திரைப்படம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செலிபிரிட்டி ஷோவில் பேசிய இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், “ரொம்ப cheat பண்ணிட்டாங்க என்னை... ஆம், four frames-ல மாநாடுனு ஒரு தமிழ்ப்படம் இருக்கு. வந்து பாருங்கனு சொன்னாங்க. ஆனா இங்க வந்து பாத்தாதான் தெரியுது. இது வெங்கட் பிரபு டைரக்ஷனில் ஒரு ஹாலிவுட் படம். சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் பின்னி உதறியிருக்கிறார்கள்.
சீரியாஸாகவே!! எனக்கு எழுத தெரியும், டைரக்ட் பண்ணத் தெரியும், நடிக்கத் தெரியும், ஆனால் எனக்கு ஏமாறத் தெரியாது. இந்த படத்துல அவ்வளவு ஏமாந்துருக்கேன், extradinary திரைக்கதை. சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா அனைவருமே extradinary-ஆக பெர்ஃபார்ம் பண்ணியிருக்கிறார்கள்.
இதை நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் நான் படத்தின் மீதான எதிர்பார்ப்புடன் வந்தேன். எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து இப்படி இருந்தால் பரவாயில்லை. எதிர்பார்ப்புடன் வந்த நான், படத்தை பார்த்து, அதற்கும் மேல் மிரண்டுவிட்டேன். முதற்பாதியை விட, இரண்டாம் பாதி extradinary. தாங்க முடியாத அளவுக்கு சிரித்தேன்.” என்று பேசியுள்ளார்.
இயக்குநர் பார்த்திபன், ஒரே ஷாட்டில் உருவாகி வரும் 'இரவின் நிழல்' திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இதேபோல், அபிஷேக் பச்சன் நடிப்பில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் இந்தி ரீமேக்கையும் பார்த்திபன் இயக்கி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.