நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து உருவான மஹா திரைப்படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இப்பட வெளியீடு தடை செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் இப்பட இயக்குநர் தரப்பில் தயாரிப்பு தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுதான் இதற்கு காரணம். இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் தற்போதைய அப்டேட் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
அதன்படி, “மஹா படத்தை இயக்கியவர் தற்போது படத்தை வெளியிட இடைக்கால தடை உத்தரவு கேட்டுள்ளார். தயாரிப்பாளர் மீதான குற்றசாட்டு என்பது, திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநரின் மதிப்பு உரிமைகள் தயாரிப்பாளரால் மீறப்பட்டுள்ளது. மேலும் உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் Section 57 Copyrights Act 1957 சட்டத்தின் படி மீறப்பட்டுள்ளது. திரைப்படம் அவர் விரும்பியபடி முழுதாக முடிக்கப்படவில்லை. அவர் பங்குகொள்ளாமல், அவரது உதவியாளர் விஜய் என்பவரை வைத்து படம் எடிட் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் தான்.
இதன்படி படத்தை 30 நிமிட மிக முக்கிய காட்சிகள் இல்லாமல், வெளியிட தடை கோரியும், இழப்பீடு தொகை 10,00,000 ( பத்து லட்ச ரூபாய்) அல்லாமல் இயக்குனருக்கு 27.07.2018 ஒப்பந்தப்படி தரப்பட வேண்டிய சம்பள பாக்கி ரூபாய் 15, 85,000 (பதினைந்து லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ரூபாய்) அளிக்கவும், அவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஆனால் தயாரிப்பாளரின் கூற்றானது திரைப்படம் முழுதாக முடிக்கப்பட்டு, சென்சார் போர்டின் அனுமதி கிடைத்த நிலையில் “இணைய திரைப்பட வெளியீட்டு தளத்தில்” ( Over The Top Platform) வெளியிட தயாராக உள்ளது. இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட தவறான புரிதல்கள் காரணமாக இயக்குநரால் இயக்குநர் சங்கத்தில் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டது என்பதுதான்.
இந்நிலையில் தற்போது மத்தியஸ்தப்படி, 18.02.2021 அன்று இயக்குநருக்கு தரப்பட வேண்டிய ஊதிய பாக்கி தொகை ரூபாய் 5,50,000 ( ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) ஆக இயக்குநர் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் அளித்தபடி வங்கி டிமாண்ட் டிராஃப்ட் ஆக இயக்குநர் சங்கத்தின் பெயரில் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இயக்குநர் படத்தின் படப்பிடிப்பையும், எடிட்டிங்கையும் தயாரிப்பாளர் விருப்பப்படி முடித்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் தயாரிப்பாளர் அவர்களால் தக்கவைக்கப்பட்டது. தயாரிப்பாளர் கூற்றுப்படி 08.5.2021 இயக்குநர் சங்கத்தில் போட்ட ஒப்பந்தப்படி, ஒப்புக்கொள்ளப்பட்ட ஊதியதொகை ரூபாய் 5,50,000 ( ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) அளிக்கப்பட்ட சான்று கருத்து கேட்பு குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.
வங்கி டிமாண்ட் டிராஃப்ட் உடன் படத்தை வெளியிடுவதற்கான “NOC” சான்றும் இதனுடன் சமர்பிக்கப்பட்டது. 08.05.2021 அன்று ஒப்பந்தப்படி தயாரிப்பாளர் திரைப்படத்தினை “இணைய திரைப்பட வெளியீட்டு தளத்தில்” ( Over The Top Platform) வெளியிட அனைத்து பணிகளையும் செய்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் இடையிலான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகள் படி, நீதிமன்றம் இயக்குநரின் நேரடி குற்றச்சாட்டான நிலுவை தொகை சம்பந்தமான குற்றச்சாட்டு, திரைப்படம் மீதான மாற்றங்களை மறுக்கிறது.
மேலும் இந்த படத்தின் முழுமையான பதிப்பு, பண முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கே தனி உரிமையானது. 27.07.2018 ஒப்பந்தப்படி தலைப்பு, படத்தின் உருவாக்கம் முதலிய எதிலும், இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை (Clause 5). இவ்வனைத்து கூற்றின் படி, திரைப்படம் மீதான தடைகோருவதற்கு இவ்வழக்கில் இடமில்லை என நீதிமன்றம் கருதுகிறது. எனவே இடைக்கால தடைகோரும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் “மஹா” படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக முதல் இயக்குநருக்கு ஊதியதொகை ரூபாய் 5,50,000 ( ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) இயக்குநருடனான ஒப்பந்தப்படி வழங்கப்படும். மேலும் வழங்கப்பட்ட தொகையான ரூபாய் 5,50,000 ( ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) உடைய பதிவு ரசீது தயாரிப்பாளரால் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.