சர்ச்சையும் சிம்பு படங்களின் ரிலீசும் பிரிக்க முடியாதது என்பதை சிம்புவின் மாநாடு பட ரிலீஸின் கடைசி நேர பரபரப்பில் மீண்டும் காணமுடிந்தது.
V ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் மாநாடு. சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். முன்னதாக மாநாடு டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தொடர்பான பேச்சுகள் வெளியாகி தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் அவை வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து மாநாடு பட ரிலீஸ் நவம்பர் 25-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.
ஆனால், திரையரங்குகளுக்குள் வந்து ரசிகர்கள் படம் பார்க்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்ததை அடுத்து,‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அதை விலக்கக் கோரி கடிதம் எழுதினார்.
ஒரு வழியாக நவம்பர் 25-ஆம் தேதி படம் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்ட பின், மாநாடு பட விழா நடந்தது. அதில் பேசிய சிம்பு அழுது உருக்கமாக பேசியிருந்தார். குறிப்பாக அந்த விழாவில், “என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு.” என குறிப்பிட்டார்.
மேலும் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென கண் கலங்கி, “என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசினார் சிம்பு. அதன்பின் அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சையும் நிறைவு செய்தார்.
அதன் பின்னர் படம் வெளியாகும் என நினைத்தால், மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என சுரேஷ் காமாட்சி திடீரென அறிவித்தது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்த தமது ட்வீட்டில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே மாநாடு படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யக்கோரி ரசிகர்கள் ஒருபுறம் ஆர்ப்பட்டம் செய்யத் தொடங்கினர்.
ஆனாலும் நவம்பர் 24-ஆம் தேதி இரவு, ரிலீஸ் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து, சிக்கல்கள் சுமூகமாகி, பட வெளியீடு மீண்டும் உறுதியாகியது. இந்த மகிழ்ச்சியை மாநாடு பட இயக்குநர் வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், “கடவுள் இருக்கார் குமாரு!” என பதிவிட்டு தெரிவித்தார்.
இதேபோல் ரோஹிணி திரையரங்கில் முன்னதாக புக் செய்யப்பட்ட 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீண்போகவில்லை என்றும் குறிப்பிட்டு வந்தனர்.
எல்லா பிரச்சனையும் முடிந்தது என்று நினைத்தால், அதிகாலை 5 மணி ஷோவும் ரிலீஸ் ஆவதால் சிக்கல் எழுந்தது. படத்தை டிஜிட்டல் வடிவத்தை திரையிடுவதற்கான கே.டி.எம் என்று சொல்லக்கூடிய முக்கியமான ஃபைல் வர தாமதமானது. பிறகு 7 மணி.. 7.30 என 8 மணிக்கு பின் மாநாடு படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகி, ரசிகர்களின் கண்ணில் சந்தோஷ கண்ணீரை வரவழைத்தது.
U/A சான்றிதழ் பெற்றுள்ள மாநாடு திரைப்படம் 147 நிமிடங்கள் [2hr 27 mins] ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.