மாநாடு படத்தின் 50வது நாளை முன்னிட்டு படக்குழுவினர் ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வரும் நிலையில், இப்படத்தின் நாயகன் சிம்பு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியடைந்தார்.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், பிரேம்ஜி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே சிம்புவின் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், மாநாடு திரைப்படம் சிம்புக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக மாநாடு அமைந்தது.
அவ்வளவு எளிதாக மாநாடு வெற்றி கிடைத்துவிடுமா. இப்படம் வெளியாவதிலும் கடும் சிக்கலை சந்தித்தது. ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து அதன் பின் மாற்றப்படுவது சினிமாத்துறையினருக்கு வழக்கமான ஒன்று. ரசிகர்கள் பட்டாளம் அதிகம் வைத்துள்ள சிம்புவுக்கே இந்த நிலையா என்பது கோலிவுட்டையே அதிர வைத்தது.
டைம் லூப்
மாநாடு திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பல காட்சியில் கை தட்டலை பெற்றார் சிம்பு. விரல் விட்டு எண்ணக்கூடிய டைம் ட்ராவல் திரைப்படங்களை பார்த்து ரசித்து சிலாகித்திருப்போம். ஆனால், மாநாடு திரைப்படத்தை டைம் லூப் முறையில் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர் வெங்கட்பிரபு.
1993-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான `கிரவுண்ட்ஹாக் டே' (Groundhog Day) திரைப்படம்தான் டைம் லூப் வகைமையில் வெளிவந்த முதல் திரைப்படம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 1947-ம் ஆண்டே `Repeat Performance' என்கிற திரைப்படம் டைம் லூப் கான்செப்ட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக திரைப்பட எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் தெரிவிக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா
மாநாடு படத்தின் பலம் எஸ்.ஜே. சூர்யா. வில்லனாக வரும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல்களை பெற்று மிரட்டி இருந்தார். இவர் எப்படிப்பா. இப்படி நடிக்கிறார் என்று அனைவரும் மெச்சும் அளவுக்கு ஸ்கோர் செய்துவிட்டார் எஸ்.ஜே. சூர்யா. யுவனின் பின்னணி இசையில் அவரது நடை உடை பேச்சு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருந்தார்.
மாநாடு
நவம்பர் 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி அரங்கு முழுவது நிரம்பியே காணப்பட்டது. கொரோனா காலத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் இப்படம் இன்னும் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், படக்குழுவினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சிம்பு ட்வீட்
இயக்குனர் வெங்கட் பிரபு, அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா காதலர்கள் மற்றும் சிலம்பரசனின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி, நீங்கள் இல்லாமல் நான் இல்லை என பதிவிட்டுள்ளார்.