Vels Film International நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள திரைப்படம், 'வெந்து தணிந்தது காடு'.
இந்த படத்தினை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ள நிலையில், நாயகனாக சிம்பு நடித்துள்ளார். AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, நடிகை ராதிகா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மக்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சிம்பு, "எனக்கு இந்த மாதிரி பிரமாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரமாண்டத்தை பார்த்ததும் நம் விழா தானா என சந்தேகம் வந்து விட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது விண்ணை தாண்டி வருவாயா விழாவிற்கு வந்திருந்தார். அந்தப்படம் போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன்.
தயாரிப்பாளர் வேல்ஸ் என்னை மகனை போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை அமெரிக்க டிரிப் கூட்டி போனதற்கு முழு காரணம் அவர் தான். கௌதம் வாசுதேவ் மேனனுடன் இது மூன்றாவது படம். நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். ஏதாவது புதிதாக செய்வோம். இந்த படத்திலும் அது இருக்கும். ஏ ஆர் ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்கள் தான் தருவார், அவருக்கு நன்றி.
சித்தி இந்தப்படத்தில் அறிமுகமாகிறார். அவர் மிகவும் நன்றாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. முதலில் ஒரு காதல் கதை செய்வதாக தான் இருந்தது. இந்தப்படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம் என்றேன். அப்போது தான் ஜெயமோகன் கதை வந்தது. இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக்கூடாது. ரசிகர்கள் தான் படத்தை பார்த்து சொல்ல வேண்டும். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி" என கூறி உள்ளார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.