நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம், அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக கடந்த நவம்பர் 2-ஆம் தேதி வெளியானது.
பழங்குடி இருளர் இன மக்கள் மீதான காவல்துறையினரின் அடக்குமுறையை காட்டமாக விமர்சிக்கும்படியான ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவான இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார். நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக படக்குழுவினரால் கூறப்பட்ட இந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியின் பின்னணியில் வரும் குறிப்பிட்ட சமூக குறியீடு மற்றும் கதாபாத்திரங்களின் பெயர் சர்ச்சை உள்ளிட்டவை தொடர்பான கேள்விகள், கண்டனங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் M.P ஒரு அறிக்கையை முன்வைத்தார். அதில், “படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கைக்கு ஜெய்பீம் படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து நடிகர் சூர்யா பதில் விளக்கம் அளித்திருந்தார். அதில், குறிப்பிட்ட அந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாகவும், இதேபோல் பெயர் சர்ச்சை என்பது எந்த பெயர் வைத்தாலும், அப்பெயருக்கு ஒரு பின்புலம் உருவாகும் என்பதால் அது முடிவின்றி நீளும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன். படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை “மதிப்புமிகு அன்புமணி ராமதாஸ் M.P.அவர்கள், இளைஞர் அணித்தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி” என்று குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “அன்புடையீர் வணக்கம், நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் OTT தளத்தில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள்.
எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் திரு. சூர்யா அவர்கள் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார். அந்த முத்திரையை படத்தில் பயன்படுத்தியதில், தயாரிப்பு நிறுவனத்திற்கோ, படத்தின் கதாநாயகன் திரு.சூர்யாவிற்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில், உங்கள் கட்சியினர் திரு.சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் திரு.சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர், துணைத்தலைவர்கள், செக்ரட்டரிகள் மற்றும் பொருளாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வெளியான இந்த அறிக்கை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரின் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.