போபால்: 'கடவுள் என் பிரா சைசை அளவிடுகிறார்' என செய்தியாளர்களிடம் பிக்பாஸ் நடிகை பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி தனது உள்ளாடையோடு கடவுளை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நடிகையின் கருத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான ஸ்வேதா திவாரி, இந்தி படங்களிலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். மாடலிங்கிலும் ஸ்வேதா ஈடுபட்டுள்ளார். பெகுசராய், பர்வரிஷ் போன்ற சீரியல்களில் ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011ம் ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறர். ரோஹித் ராய், திகங்கனா சூர்யவன்ஷி மற்றும் சௌரப் ராஜ் ஜெயின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள "ஷோ ஸ்டாப்பர்" என்ற தனது வலைத் தொடரின் விளம்பரத்தின் போது ஸ்வேதா திவாரி இவ்வாறு பேசியுள்ளார்.
ஊடகவியலாளர்களுடனான உரையாடலின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்தபோது அவரது சக நடிகர்களும் உடனிருந்தனர். ஸ்வேதா திவாரியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் தனது உள்ளாடையைப் பற்றி பேசும்போது கடவுளைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்வேதா திவாரி, "மேரே ப்ரா கி சைஸ் பகவான் லே ரஹே ஹை" என்று கூறி உள்ளார். (கடவுள் என் ப்ராவை அளவிடுகிறார்).
'மகாபாரதம்' என்ற பிரபல தொலைக்காட்சி தொடரின் நடிகர், புராண நிகழ்ச்சியில் கிருஷ்ணராக நடித்த சவுரப் ஜெயின், வரவிருக்கும் இந்த தொடரில் 'ப்ரா ஃபிட்டர்' வேடத்தில் நடிக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஸ்வேதா திவாரி, சௌரப்பைக் குறிப்பிட்டு நகைச்சுவையாக கூறியதாக தெரிகிறது. நடிகையின் பேச்சு குறித்து உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிடம் வியாழக்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது, "நடிகை பேசியதைக் கேட்டேன், அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கூறினார். இந்நிலையில், நடிகை விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.